சிந்தனை செய் மனமே

Monday, November 5, 2018

தோல்வி நம் நண்பன் முஸ்தபா....


தோல்விகளைப் பற்றிய ஆராய்ச்சி...



தோல்விகளை மதிக்கத் தொடங்கி விடுவது வெற்றியின் முதல் படி...

தோல்விகளை அங்கீகரிக்கத் தொடங்குவது, தடங்கல்களை அடையாளம் காண வழி வகுக்கும்....

தோல்விகளை கொண்டாடுவது, எடுத்த முயற்சிகளை பாராட்டுவது மிக முக்கியம்...


குடும்பத்தில் உள்ளவர்களின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் பண்பு, தோல்வியடைந்தாலும் அன்பு மாறாமல் இருப்பது, தோல்வியடைந்தவர்களின் மனநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது... வீட்டிற்குள் தமக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டால், கோயில், குளம், மூட நம்பிக்கைகள், போலிச்சாமியார் என்று எதையாவது அணுக வேண்டிய அவசியம் இருப்பது இல்லை...

சிறு வயது முதலே குழந்தைகளுக்கு தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

தோல்வியடைந்தால் அதைப் பற்றி குழந்தைகள் விரிவாக பேசுவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.
நமது மக்கள் புலம்பல் என்று அதற்கு சொல்வது சரியல்ல. ஏன் தோல்வி அடைந்தேன்? என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டேன்? கவனக்குறைவா, சரியாக திட்டமிட தெரியவில்லையா? என பல்வேறு கோணங்களில் சிறு வயதில் (பள்ளி வயதில்) பேச, தோல்விகளை பற்றி ஆராய்ச்சி செய்ய இடம் கொடுக்க வேண்டும்.

அதற்கு அனுசரணையான முறையில் கேட்கும் திறன் (Listening to the core) உள்ளவர்களாக பெற்றோரும் ஆசிரியரும் இருத்தல் வேண்டும்.

பள்ளிப் பாடத்தில் தோல்வியடைந்தால் மிக அதிகமாக கோபமடையும் பெற்றோர், தோல்வி குறித்த அச்சத்தையே குழந்தை மனதில் விதைக்கிறார்கள்.

தோல்விகளைக் காணாத பிள்ளைகள், எப்படியாவது தோல்வியின் அருகில் சென்று விடாதவாறு , எல்லாப் பயிற்சிகளும் கவனிப்புகளும், கட்டுப்பாடுகளும் அளிக்கப் பட்டு, தோல்விகளின் வாடை தெரியாமல் வளர்க்கப் படும் குழந்தைகள் மனதளவில் வலிமையற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வெளி உலகில் அடியெடுத்து வைக்கும் போது,  "தோல்விகளை பாரமாக அல்லது கீழ்த்தரமாக" எண்ணும் மனப்பாண்மையிலே தம் வாழ்க்கையை நோக்குகிறார்கள்...
இப்படி பட்டோர் தம் மனப்பான்மையை தம் சுற்றத்தாரிடமும், பிள்ளைகளிடமும் கட்டாயமாக வெளிப்படுத்துகிறார்கள்.
எப்பாடு பட்டாவது, எதைச் செய்தாவது தோல்வியை தவிர்க்க தவறான வழிகளில் கூட ஈடுபடத் துவங்கி விடுகிறார்கள்.


தோல்விகளைப் பற்றி பேசும் போது தான், அதே போல் தோல்விடைந்தவர்களும் இவ்வுலகில் உள்ளதை உணரத் துவங்குகிறோம். நமக்கு மட்டும் ஏன் எல்லாமே தோல்வியாக முடிகிறது என்ற கேள்வி முதலில் மறையத்துவங்குகிறது. பின், நம்மைப் போன்ற வலிகளை கடந்தவர்களை அடையாளம் காண முடிகிறது. நம்மை விடவும் அதிகமான தோல்விகளையடைந்தவர்கள் எப்படி கடந்து வந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

தோல்வியும் ஒரு அனுபவம், அதுவே வாழ்க்கையின் அடையாளம் அல்ல என்பதை ஏற்றுக் கொண்ட பின் இனி நம்மை நாமே அங்கீகரிக்கத் துவங்குகிறோம்.

நமக்கான ஆரோக்கியமான பயிற்சிகளை, முயற்சிகளை மேற் கொள்ளத் துவங்கி விடுகிறோம்.
மற்றவர்களிடம் தேவையான உதவிகளைக் கேட்கத் துவங்குகிறோம். திரும்பத் திரும்பத் தோல்விடையும் போது, தகுந்த நேரத்தில் உதவி கேட்க வேண்டும், தகவல்களை தகுந்த நேரத்தில் தேடி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணரத் துவங்குகிறோம்.

நம்மை நாமே பார்த்துக் கொள்ளத் துவங்கி விடுகிறோம்.

இதை சிறு வயது முதலே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விட்டால், மன உறுதியும் உற்சாகமும் இயற்கையாய் குழந்தகளுக்கு வளரும்.





No comments:

Post a Comment

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர் : திருக்குறள் - பற்றற்றெம் என்பர் செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என...